search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு தள்ளுபடி"

    இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. #SCdismisses #twochildnorm #fieldcandidates #SCdismissespil
    புதுடெல்லி:

    பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என உள்ளது. அதே நேரத்தில் இரு குழந்தைகள் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்கள் பதவி இழக்க நேரிடும் எனவும் அச்சட்டத்தில் உள்ளது.

    இந்நிலையில், இந்த சட்டவிதியை மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் அமல்படுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள்  தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.



    அரசு வேலைவாய்ப்பு, அரசாங்க நிதியுதவி மற்றும் மானியங்களுக்கும் இந்த அளவுகோலை வைக்க வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தேர்தல்களில் நிற்க தடை விதிப்பதுடன், அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும்  என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #SCdismisses #twochildnorm #fieldcandidates  #SCdismissespil
    பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #PakistanSC #blasphemycase #Asiabeevi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு உள்ளூர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் மேல்மூறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் 31-10-2018 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தனர்.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    ஆசியா பீபி விடுதலை செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரி முஹம்மது சலாம் என்பவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.



    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு இன்று இம்மனுவை தள்ளுபடி செய்தது.

    ஆசிபா பீபியை விடுதலை செய்வதற்கு முன்னதாக முஸ்லிம் மதத்தலைவர்களின் கருத்தையும் நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார்.

    இதுஎப்படி மத விவகாரம் ஆகும்? சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் இந்த கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவர் குற்றவாளி அல்ல என்று தெரிந்தும் அவரை தண்டிக்க வேண்டும் என இஸ்லாம் மதம் கூறுகிறதா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார். #PakistanSC #blasphemycase #Asiabeevi
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #JactoGeo #HighCourt
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவன், தன் தந்தை மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே இந்த போராட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மனுதாரர் வக்கீல் நவீன், மதுரை கிளையில், இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் வழக்கை விசாரித்து வருகிறது என்றார். ‘டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரிக்கும்போது, தனி நீதிபதியான நான் எப்படி விசாரிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக கூறினார்.

    இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல், வழக்கை திரும்பப்பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #JactoGeo #HighCourt
    மாயமான மலேசிய விமானம் எம்எச்370 தொடர்பாக போயிங், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt
    வாஷிங்டன்:

    மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்எச்370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

    விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது? என்பதற்கு விசாரணக்குழுவின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலேசிய விமான விபத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்இ  ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மலேசிய விமான நிலையத்தில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார். #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt

    சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MadrasHighCourt #MemorialInMarina
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்கள் உள்ளன. எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா சமாதியும் உள்ளது. அவருக்கு அந்த இடத்தில் நினைவிடம் கட்டும் பணிகளை அரசு தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக  விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மெரினாவில் நினைவிடம் அமைத்தால் அதன் இயற்கை அழகு சீர்கெட்டுவிடும் எனக்கூறி வழக்கறிஞர் காந்திமதி கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து காந்திமதியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MadrasHighCourt #MemorialInMarina
    தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #EVVelu
    புதுடெல்லி:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக 11 லட்சத்துக்கும் மேல் சொத்து சேர்த்ததாக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

    திருவண்ணாமலை கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து 2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


    இதையடுத்து எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, சந்தன கெளடா அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, திருவண்ணாமலை கீழமை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது சரியானதே என நீதிபதிகள் தெரிவித்தனர். எ.வ. வேலு மற்றும் அவரது மனைவி மீது அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாக கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். #SC #EVVelu #AssetsCase
    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தூரம் உள்ள திரிசூலத்துக்கு ரூ.5 என்றும், 27 கி.மீ. தூரம் உள்ள தாம்பரத்துக்கு ரூ.10 என்றும் மின்சார ரெயிலில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



    ஆனால் மெட்ரோ ரெயிலில் இதற்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது மின்சார ரெயில் கட்டணத்தைவிட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதையடுத்து மத்திய ரெயில்வே துறையின் செயலாளர், தமிழக தலைமை செயலாளர், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். அதில், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மின்சார ரெயில் கட்டணத்தை போல, ரூ.5 மற்றும் ரூ.10 என்று கட்டணமாக குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

    இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் தன்னை அனைத்து உலக எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் என கூறிக்கொண்டு, மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம் என்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

    ஆனால், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது?, நில ஆர்ஜிதம் மற்றும் மெட்ரோ ரெயில்கள் வாங்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது? என்ற புள்ளி விவரம் எதுவும் மனுதாரரிடம் இல்லை.

    மேலும், மெட்ரோ ரெயில் இயக்க ஆகும் செலவின் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதிகள், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரியாகவோ அல்லது செலவு தணிக்கையாளராகவோ உட்கார்ந்து கொண்டு கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியாது.

    கட்டணம் நிர்ணயம் செய்வது மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில், தலையிட ஐகோர்ட்டுக்கு குறைந்தபட்ச அதிகாரம் மட்டுமே உள்ளது.

    மேலும், மின்சார ரெயிலை விட, மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெரும் தொகையை கட்டணமாக வசூலிப்பதால், எந்த வகையில் தன்னுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்று மனுதாரரால் கூற முடியவில்லை.

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை சரிசெய்யும் வேலை இந்த ஐகோர்ட்டுக்கு கிடையாது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    ×